மதுரை ஸ்ரீ கஸ்தூரி விலாஸ்
அம்மாவின் கை சாப்பாடையும், மதுரை ஹோட்டல் சாப்பாடையும் நான் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். நான் வீட்டிலிருந்து தொலைவில் உள்ள பள்ளிக்கு போனதால், அம்மாவிற்கு அதிகாலையில் மதிய உணவு சமைப்பது சிரமம்…ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை வெறும் இட்லியும் பொடியும் தான். பின்பு, ஆறாம் முதல் பத்தாம் வரை இட்லி உப்புமா, தோசை, தயிர் சாதம் இப்படி. பின்பு, பதினொன்றாம் முதல் கல்லூரி வரை வெரைட்டி ரைஸ். நான் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுது, பல்கலைகழகம் வீட்டிற்க்கு அருகே இருந்ததால் தினமும் மதியம் சூடான சுவையான சாப்பாடு சமைத்து கொடுத்து விடுவாங்க. என் பிரண்ட்ஸ் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அம்மா பல ஊர்களில் வசித்து வந்ததால் பலவகையான உணவு சமைப்பது அவங்களுக்கு கை வந்த கலை. 1970-80 ஆண்டுகளிலேயே பிஸா, கேக், மபின்ஸ், ஐஸ் கிரீம், ஜாம் என்று சிறு வயதில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை செய்வார்கள். சுவையான பலகாரங்கள், காரசாரமான ஊர்காய்கள், வித விதமான வத்தல்கள், மணமான சமையல் பொடிகளையும் செய்வாங்க. நானோ இவைகளை கடையில் வாங்கிகின்றேன். அம்மா சமையல் போட்டிகளிலும் பங்கேற்றது உண்டு. எங்கள் வீட்டில் அம்மா மட்டும் அல்ல, அப்பாவும் சமையல் ஆர்வம் கொண்டவர். அப்பாவின் சிறப்பம்சம் பேப்பர் தோசையும் மிளகாய் சட்டினியும் தான்.
என்னை பற்றி சொல்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும் வரை நான் சமையல் செய்தது கிடையாது. இந்தியாவை விட்டு வெளியே வந்த பிறகு தான் நான் சுயமாக சமையல் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பக் காலத்தில் அம்மாவின் சமையல் குறிப்புக்களும், சமையல் புத்தகங்களும் உதவின. இப்பொழுது சமையல் வெப்சைட்ஸ்-களும் ப்ளொக்ஸ்-களும் உதவிகின்றன. இதை தவிர அண்ணி லக்ஷ்மி மற்றும் அக்கா நிம்மி இவர்களை சமையல் குறிப்புக்கள் கேட்டு தொந்தரவு செய்வேன்.
நான் ஆங்கிலத்தில் கல்வி பயின்றிருந்தாலும், தமிழ் மீது பற்று உண்டு. சின்ன வயதில், அக்கா, சின்னம்மா, அத்தை, பாட்டி… இவங்களுக்கு எல்லாம் கடிதம் எழுதுவேன். இப்பொழுது தமிழில் எழுத வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரொம்ப நாளாகவே எனக்கு தமிழில் ப்லோக் எழுத வேண்டும் என்ற ஆசை. என் கணவர் தமிழை எழுத்து கூட்டிப் படிப்பவர். அதனால், அவரையும் அடுத்த தலைமுறையையும் கருத்தில் கொண்டு ஆங்கிலதிலேயே எழுதிகிறேன்.
பின் குறிப்பு:
இந்த வலைப்பதிவினை என் அன்னை கஸ்தூரிக்கு நான் அர்ப்பணிக்கின்றேன்.
